History of Tamil New Year- 5126 as per planetary positions and sun solstice.
தமிழ்ப் புத்தாண்டு 5126 ஆம் கலியாண்டில், மேழம்/மேடம் (சித்திரை) மாதம் முதல் நாளில் (14.4.2025) தொடங்குகிறது. கலியாண்டு என்பது தமிழர்களின் தொடராண்டு முறை. பொது ஆண்டுடன் 3101 ஐக் கூட்டினால் கலியாண்டு கிடைக்கும் (3101 + 2025 = 5126). கலியாண்டு என்பது ஞாயிறு ஆண்டு முறையை பின்பற்றி 5000 ஆண்டுகளுக்கு முன்பே பழந்தமிழர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
சங்ககாலப் பெரும்புலவர் நக்கீரன் (கி.மு. 3ஆம் 2ஆம் நூற்றாண்டு) பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநெல்வாடையில்
”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” (வரி: 160 – 161).
எனப் பாடுகிறார். ஆடு என்பது மேழம்/ மேடம் (சித்திரை) என்பதைக் குறிக்கிறது. ஆகவே மேழத்தை முதன்மையாகக் கொண்டு ஞாயிற்றின் சுழற்சி நடைபெறும் என்பதை இப்பாடல் உறுதிப்படுத்துகிறது. ஆகவே ஆண்டின் தொடக்கநாள் என்பது மேழத்தின் தொடக்க நாள் எனத் தமிழர்கள் கருதி வந்தனர். ஆகவே அதுதான் தமிழர்களின் ஆண்டுப்பிறப்பு நாளாகும்.
ஞாயிறு மேழம் மாதத்தின் முதல் நாளில் மேழம் இருக்கையில் (இராசியில்) நுழைகிறது. அதுவே ஆண்டின் முதல் நாள் என்பதால் மேழம் (சித்திரை) நாளின் முதல் நாளே தமிழர்களின் வருடப் பிறப்பு நாளாகும். ஆகவே கலியாண்டு முறையைப் பின்பற்றி வருகிற மேழம் (சித்திரை) மாதத்தின் முதல் நாளை (14.4.2025), 5126ஆம் கலியாண்டின் வருடப்பிறப்பு நாளாகக் கொண்டு தமிழர்களின் புத்தாண்டு நாளாக அதனைக் கொண்டாடுவோம்.
தமிழர்கள் இன்றைக்கு 5345 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கி இரும்புப்பொருட்களை தாயாரித்து உலகின் முதல் இரும்புக்கால நாகரிகத்தைக் கொண்டவர்கள் என்பதால் அன்றே அவர்கள் தங்கள் தொடராண்டு முறையான கலியாண்டு முறையைத் தொடங்கி விட்டார்கள். ஆகவே மேழம் (சித்திரை) முதல்நாள்தான் தமிழர்களுக்கான வருடப்பிறப்பு நாளாகும்.
தை மாதத்தை திருவள்ளுவர் ஆண்டாகப் பின்பற்றலாம். ஆனால் தமிழர்களின் வருடப்பிறப்பு என்பது கலியாண்டுக்கான மேழம் முதல் நாள்தான் எனக் கொண்டு அதனையே விழா எடுத்து கொண்டாடுவோம்.
கலியாண்டு தமிழ் மாதங்கள்
1. மேழம் (சித்திரை)
2. விடை
3. ஆடவை
4. கடகம்
5. மடங்கல்
6. கன்னி
7. துலை
8. நளி
9. சிலை
10. சுறவம்
11. கும்பம்
12. மீனம் (பங்குனி)
வான மண்டலத்தில் உள்ள 27 நாள்மீன்களைக் (நட்சத்திரங்கள்) கொண்ட 12 இருக்கைக் (இராசி) கட்டங்களின் வழியே ஞாயிறு பயணம் செய்து முடிக்க ஒரு வருடம் எடுத்துக்கொள்கிறது. இந்தப் பயணவழியைத்தான் ஞாயிறு மண்டலம் எனத் தமிழர்கள் கருதினர். ஒவ்வொரு இருக்கைக் (இராசி) கட்டத்திற்கும் ஞாயிறு ஒருமாதம் எடுத்துக் கொள்கிறது.
இந்தக் கலியாண்டு தொடராண்டு என்பதால் அந்த 60 ஆண்டுகள் இனித்தேவை இல்லை.
கலி தூய தமிழ் சொல். கலி என்பதற்கு மகிழ்ச்சி என்று பொருள். பழந்தமிழ் இலக்கியங்களில் கலி என்ற சொல் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கலித்தொகை, குறிஞ்சிக் கலி, மருதக் கலி, நெய்தல் கலி , முல்லைக் கலி, பாலைக் கலி என் பயன்படுத்தப்பட்டுள்ளது. கலிப்பா என்பது தொல்காப்பியர் கூறிய பா வகை. மகிழ்ச்சிக்கான பா வகை. ஆகவே கலி என்பது அழகிய தமிழ் சொல். வட மொழியினர் இதை எடுத்து பயன்படுத்தினர் என்பதால் அது வடமொழிச் சொல் ஆகாது .
கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த சோழன் நலங்கிள்ளி குறித்து அதே காலகட்ட உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய புறநானூற்றின் 30ஆம் பாடலோ ஞாயிற்றின் இயக்கம் குறித்தும் அது செல்லும் பாதை குறித்தும் அந்த இயக்கத்தைச் சுற்றியுள்ள மண்டலம் குறித்தும் தனித்து நிற்கும் வெளி எனும் ஆகாயம் குறித்தும் பேசுகிறது.
செஞ் ஞாயிற்றுச் செலவும்
செஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்று இவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே – (புறம்-30)
இந்த ஞாயிறு மண்டலம்தான் 12 இருக்கைகளாக இருக்கைக் (இராசி) கட்டத்தில் காட்டப்படுகிறது.
குறிப்பு:
தை மாதம் வட செலவை தொடங்கும் ஞாயிறு, ஆடி மாதம் தென்செலவை தொடங்கும்.
தை மாதத்தில் ஞாயிறு வட செலவை தொடங்கும் என்பதால் தை மாதம் முதல் நாளில் வருடப்பிறப்பு தொடங்கும் எனில், ஆடி மாதத்தில் தென் செலவை ஞாயிறு தொடங்கும் என்பதால் ஆடி மாதம் முதல் நாளில் வருடப்பிறப்பு தொடங்கும் எனக் கூற முடியாது என்பதால் இந்த இரண்டுமே வானியலின்படி பொருத்தமற்றது.
ஞாயிறு, ஐப்பசி மாதம் நீச்சம் அடையும், சித்திரை மாதம் உச்சம் அடையும். ஆகவே அப்படி உச்சம் அடையும் சித்திரையே தமிழருக்கு புத்தாண்டு.
பத்தாம் நூற்றாண்டு சோழர் கல்வெட்டில் இச்செய்தி சொல்லப்பட்டு அதன் அடிப்படையில் தான் சோழர்கள் சித்திரை மாத முதல் நாளை வருடப்பிறப்பாக ஏற்று செயல்படுத்தினர.
ஞாயிறு மண்டல இருக்கைக் (இராசி) கட்டம்.
எழுத்தர்!
கணியன் பாலன்
No comments:
Post a Comment